உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும்விட மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ சிறுத்தையை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பெண்டகனின் நிதியொதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நான்கு கால்களையுடைய ரோபோ இயந்திரமானது, மணித்தியாலத்திற்கு 28 மைல்கள் வேகத்தில் ஓடியுள்ளது.
இந்த சீட்டா ரோபோவின் வேகமானது, உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும் விட அதிகமானதாகும். உசைன்போல்ட் 2009 ஆம் ஆண்டில் நூறு மீற்றர் தூரத்தை 27.8 விநாடிகளில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி இயந்திரமானது போஸ்டன் டைனமிக்ஸினால் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் நிறுவனத்தினால் வெவ்வேறு வகையிலான இராணுவ ரோபோக்களின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதிகளை கொண்டு ரோபோக்களை வடிவமைக்கும் செயற்பாட்டில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.
‘மணித்தியாலத்திற்கு 28 மைல் வேகத்தை அடைவது என்பது மிகவும் சவால்மிக்க குறிக்கோளாகும். இதற்காக நான் எனது ரோபோ குழுவினரை பாராட்டுகிறேன்’ என ரோபோவியல் விஞ்ஞானியான டாக்டர் அல்பிரட் றிசி தெரிவித்துள்ளார்.
‘இந்த இயந்திரமானது வேகமாக ஓடும்போது அதனது வெளிப்புறப் பகுதிகள் சுதந்திரமாக இயங்க வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். இதற்காக ‘வைல்ட் கெட்’ என்ற பெயரில், திறந்த வெளியில் ஓடக்கூடிய இயந்திரத்தை உருவாக்கி வருகிறோம். இது அடுத்த வருடத்தின் முன்பகுதியில் பரிசோதிக்கப்படும்’ என அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இந்த இயந்திரமானது அவசர நிலைமைகளிலான பதிலளிப்பு, மனிதாபிமான உதவிகள், மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பங்களிப்புச் செய்யும் என அமெரிக்க படையினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதேவேளை, மனிதனைவிட வேமாக ஓடக்கூடிய இவ் இயந்திரத்தின்மூலம், யுத்த களங்களில் அதிவேக கொலையாளியாக உருவாகலாம் என ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ இயந்திரத்துறை பேராசிரியரான நோயல் ஷார்க்கி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment